எதிர் வீடு காலியான A/Lவிடுமுறையில் இதயத்துக்குள் குடி புகுந்தது ஒரு கனவு: “இரண்டிலும் ஒரு தேவதை குடிவருவாளா?”
உறங்கிக் கொண்டிருக்கும்போதே உன் கனவு பலித்ததுண்டா? நான் உறங்கிக்கொண்டிருந்த ஒரு பின்னிரவில்தான் உன் குடும்பம் எதிர்வீடு புகுந்தது!
பழகிய ஒரே வாரத்தில் என் வீட்டு சமையலறை வரை வருகிறாய்! எப்போதும் உன்வீட்டு வாசல்படி தாண்டியதில்லை நான்!
என் அம்மாவிடம் கதையளக்கிறாய்… என் அப்பாவிடம் பேசுகிறாய்… என் தங்கையிடம் விளையாடுகிறாய்… என்னை மட்டும் பார்க்கிறாய்!
அடுத்த வாரமே கலந்தாய்வு*க்கு ஒன்றாய்ப் பயணிக்கிறோம் ! மறு வாரமே ஒரே கல்லூரியில் சேர்கிறோம்!!
ஒருமுறை தானே இயற்கை வரம் தரும்… வாரா வாராம் தருமா என்ன?
அந்த ஒருமாதமும் கோடை விடுமுறையல்ல… கொடை விடுமுறை!
என் வீட்டில் எல்லோரிடமும் பேசுகிற நீ! உன் வீட்டில் யாரிடமும் பேசாத நான்! நம்முடன் பேசியும் பேசாமலும் நாம்!
முதலாமாண்டு எதிர்வீட்டுப்பெண்ணாய்… இரண்டாமாண்டு கல்லூரித்தோழியாய்… மூன்றாமாண்டு நலம்விரும்பியாய்… என் இதயவாசல்கள் ஒவ்வொன்றாய்த் திறந்து உள்நுழைகிறாய்!
மூன்றாண்டுகளாக… எதையெல்லாமோப் பேசி தீர்த்த நாம் இறுதியாண்டு முழுதும் காதலைப் பற்றியே பேசியதன் காரணம் அப்போது தெரியவில்லை!
காதலைப் பற்றிய உன் எண்ணங்களை முழுதாய் அறிந்து கொண்டபோதும் உன்னை மனைவியாக அடையப் போகிறவன் கொடுத்து வைத்தவன் என்றே நினைத்துக் கொண்டது என் மனது!
பின்னொரு நாள் என் கவிதைகளை வாசித்து விட்டு என்னைக் கணவனாய் அடையப் போகிறவள் கொடுத்து வைத்தவள் என்று நீ சொல்ல மெல்லிய சலனம் எனக்குள்!
அதன்பிறகு என் மீது நீ அக்கறை கொள்ளும் ஒவ்வொரு நிகழ்விலும் கொஞ்சம் கொஞ்சமாய் உடைந்து கொண்டிருந்தது உன் மீது நான் கொண்டிருப்பது நட்புதான் என்ற என் நம்பிக்கை!
எப்போது, எப்படி, எதனால் என்கிற கேள்விக்கெல்லாம் பதில் சொல்லாமல் நம் நட்புக்குள்ளே சத்தமில்லாமல் மெதுவாய் நுழைந்து கொண்டிருந்தது என் காதல்!
ஒருநாள் பழைய நண்பனிடம் உன்னை அறிமுகப் படுத்துகையில் உதடு சொன்னது – “எதிர் வீட்டுப் பெண்” உள்ளம் சொன்னதோ – “எங்க வீட்டுப் பெண்”
மின்சாரம் இல்லாத அந்தப் பௌர்ணமி இரவில் மொட்டை மாடியில் கூடியிருக்கிறது குடும்பம்… என்னிடம் தனியாக கேட்கிறாய்…
“ஒரு கவிதை சொல்லு”
“எதைப் பற்றி?”
“ம்ம்ம்… என்னைப் பற்றி?”
“சுடிதாரிலும் வருகிறாய்… தாவணியிலும் வருகிறாய்… நீ புதுக் கவிதையா? மரபுக் கவிதையா?”
“ம்ம்ம்… காதல் கவிதை!”
மின்சாரம் வந்தது! நீ மறைந்து போனாய்…
எனக்கேத் தெரியாமல் நானுன்னைக் காதலிக்க… உனக்கேத் தெரியாமல் நீயென்னைக் காதலிக்க… காதலுக்கு மட்டுந்தான் தெரிந்திருக்கும், அப்போது நாம் காதலித்தது!
அடுத்துவந்த நாட்களில் வார்த்தைகளைத் தாண்டி பார்வைகள் பேசிக்கொண்டதை வார்த்தையில் வடிக்க முடியுமா?
எல்லோர்க்கும் முன்பு பேசிக்கொண்டிருந்தவள், யாருக்கும் தெரியாமல் ரகசியமாய்ப் பேசுகிறாய்!
பேசுவதே பாதிதான்…அதிலும் பாதியை பார்வையில் சொல்லிவிட்டுப் போனால் எப்படிப் புரியும்?
பன்மொழி வித்தகனாக யாராலும் முடியும்! பெ(க)ண்மொழி வித்தகனாக யாரால் முடியும்?
காதல் சொல்லப்படுவதும் இல்லை! கேட்கப்படுவதும் இல்லை! அது உணரப்படுவது! உணர்ந்ததும் பாடாய்ப் படுத்துவது!
நம் காதலை நாம் உணர்ந்தபிறகும் யார் முதலில் சொல்வதென நம்மிடையேப் போட்டி! நடுவராய் இருக்கிறது நம் காதல்!
பெண்கள் காதலைச் சொல்லும்போது வெட்கம் பிடுங்கித் தின்னுமாம்… ஆண்கள் காதலைச் சொல்லும்போது பயம் வந்து கொல்லுமாம்…
உன் வெட்கத்துக்காக நான் காத்திருக்க… என் தைரியத்தை நீ பரிசோதிக்க… தவித்துக் கொண்டிருந்தது நம் காதல்!
வென்றாய் நீ! சொல்லிவிடத் துணிந்து விட்டேன் நான்! எப்படி? எப்படி?? எப்படி???
“சொல்லுவது எளிது, சொன்னதை செய்வது கடினம்!” ** காமத்துப்பால் எழுதிய வள்ளுவனா இப்படி சொன்னது? காதல் மட்டும் இங்கே முரண்படுகிறது!
அதே மொட்டை மாடி… மாலை நேரம்… நீ…நான்…தனிமை…
“உங்கிட்ட ஒன்னு சொல்லனும்; ஒன்னு கேட்கனும்”
“சொல்லு”
“நான் ஒரு பொண்ணக் காதலிக்கிறேன்”
“கேளு”
“அ..து.. நீ.. தா..னா..ன்..னு.. தெ..ரி..ய..னு..ம்…”
திக்..
திக்..
திக்..
“ம்ம்ம்… இது எனக்கு முன்னாடியேத் தெரியுண்டா லூசு!”
சொல்லிவிட்டு வெட்கப் பட்டாய் நீ! தோற்கவில்லை நான்!
“காதலுக்குப் பரிசெல்லாம் இல்லையா?”
“என்ன வேணும்?”
“ஒரு முத்தம்”
சிரித்துக் கொண்டே என் உள்ளங்கை எடுக்கிறாய்…
“நீ உதட்டில் கொடுப்பது மட்டும் தானடி முத்தம்… மற்றதெல்லாம் வெறும் சத்தம்!”
சொல்லிவிட்டு, புன்னகையோடு நான் பார்க்க , “நீ ரொம்பப் பேசற.. உனக்குக் கையிலக் கூடக் கிடையாது.. இந்தா இப்படியே வாங்கிக்க” என்று சொல்லி
“உன் உள்ளங்கையில் முத்தமிட்டு உதடு குவித்து ஊதி விட்டாய்… காற்றிலெல்லாம் கலந்துபோனது, உன் காதல் வாசம்!”
“என்னிடம் காதல் வாங்கினால் முத்தம் இலவசம்” என்றாய்… “என்னிடம் காதல் வாங்கினால் மொத்தமாய் நானே இலவசம்” என்றேன்…
தனக்கொரு க(வி)தை இலவசமாய்க் கிடைத்த மகிழ்ச்சியில் நம்மையேப் பார்த்துக் கொண்டிருந்தது… நம் காதல்!