நீருக்கு நிறமில்லையென்பதெல்லாம்
பூக்களைப் பார்க்காதவர்கள் சொல்லி வைத்தப் பொய்கள்.
ரோஜாவுக்கு ஊற்றிய நீர் சிவப்பாய்…
மல்லிகைக்கு ஊற்றிய நீர் வெள்ளையாய்…
நீரும் பூக்குமடி! பூக்களெல்லாம் பெண்களாம்.
வண்டுகள் எல்லாம் ஆண்களாம். எந்த மூடன் சொன்னது?
பெண் வண்டு உட்காரும் பூ ஆண் பூவாய் இருக்கலாமே!
பறிக்கப் போகிறாய் என்று தெரிந்தாலும் எப்படி சிரிக்க முடிகிறது இந்தப் பூக்களால்?
பறித்தப் பிறகும் நீ சூடும் போது மட்டும் மறுபடி ஒருமுறை பூக்கிறதே எப்படி?
வாடாமலே இருந்து விட்டால் பூவுக்கும் உனக்கும் பெரிய வித்தியாசமில்லை!
இதழ் திறந்தால் இரண்டிலும் தேன் தான்!
நீயிருக்கும்போது என்ன வரம் பெற்று காதலின் சின்னமானதோ ரோஜா!
ஒருவேளை முட்கள் அதிகம் இருக்கிற சாபத்தாலா?
எல்லாம் உன்னிடம் சொல்ல வேண்டும், வருவாயா?