இருட்டில் மறைந்திருந்தேன். தூரத்தில் வண்டியின் சத்தம் கேட்டது. வா..வா.. உனக்காகத்தான் காத்திருக்கிறேன் என்று மனதுள் நினைத்துக் கொண்டேன். இந்த தெரு மெயின் ரோடிலிருந்து உட்புறமாய் திரும்பும் தெரு. நிச்சயமாய் இம்மாதிரியான ஆள் அரவம் அற்ற இரவு நேரத்தில், என்னை எதிர்பார்க்க மாட்டார்கள். எதிர்பார்ப்பு இல்லாத நேரத்தில் தாக்குவது சுலபம். மிக சிலரே இம்மாதிரியான நேரங்களில் சுதாரித்து, சட்டென வேறு பாதையையோ, அல்லது எதிர் தாக்குதலை கொடுக்க வல்ல ஆட்களாய் இருப்பார்கள். ஆனால் பெரும்பாலான ஆட்கள், ஓடி வரும் அரவத்திலேயே, பயந்து உடல் விதிர்த்து தடுமாறி, வண்டியை அப்படியே விட்டு, விட்டு, கீழே விழுந்தெழுந்து தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடியிருக்கிறார்கள். சிலர் என்னிடம் சண்டையிட்டு போராடியிருக்கிறார்கள். சிலர் என்னிடம் மாட்டியுமிருக்கிறார்கள்.
வண்டியின் சத்தம் மிக அருகில் கேட்கிறது இருங்கள் வருகிறேன். ரோட்டின் திருப்பத்தில் இரண்டு லைட்டுகள் தெரிந்தது. நிச்சயம் கார்தான். அவ்வளவு தூரத்தில் வண்டியின் கலர் எனக்கு தெரியவில்லை. இரவு நேரத்தில் அருகில் வரும் வரை இது ஒரு பிரச்சனை. நான் காத்திருப்பது ஒரு மாதிரியான, பழுப்பு, அல்லது அழுக்கு கலர் காரும், இருட்டிலும் ஒளிரும் ஸ்டிக்கர் பொருத்திய ஒரு பைக்கையும் தான். பைக்கின் கலர் ஒரு அழுத்தமான வண்ணம் அதலால் சரியாக சொல்ல முடியாது. இவர்கள் இருவரைத்தான் தேடிக் கொண்டிருக்கிறேன். ஒரு மாதமாய். ஆம் ஒரு மாதமாய்தான் தேடிக் கொண்டிருக்கிறேன். அவர்களை தேடித்தான் ஒவ்வொரு இரவும் அங்கிங்கு நகராமல் இந்த இருட்டு திருப்பத்தில் காத்திருக்கிறேன். அவர்கள் ஒருவன் என்று நினைத்துத்தான், திடுக்கிட்டு தாக்க முயற்சிக்கிறேன். நான் முழுசாய் தூங்கி ஒரு மாதமாகிவிட்டது.
ஆனால் நான் தூக்கமிழந்ததுக்கு காரணம், இந்த இரண்டு பேர்களால் மட்டுமல்ல. நிஷாவால். அந்த பெயர் கூட அவளுடன் வ்ந்த ஒரு பெண் கூப்பிட்டபோது தெரிந்தது. நிஷா.. எவ்வளவு அழகான பெயர். அவளுக்கு அந்த பெயர் வைத்த மாகானுபாவர்களுக்கு ஒரு முத்தம். நிச்சயமாய் அவளை போல ஒரு அழகியை என் வாழ்நாளில் சந்தித்ததில்லை. ஒரு இலக்கில்லாத மாலை நேரத்தில் கால் போன போக்கில் இந்த தெருவழியாய் வந்த போதுதான் அவளை பார்த்தேன். அவளை பார்த்த மாத்திரத்தில் எனக்குள் சிலிர்த்தது. எனக்கானவள் என்ற ஒரு உணர்வு உடலெங்கும் பதறி, பதறி ஓடியது. காதல் ..காதல்.. என்று சொல்வார்களே அது இதுதானோ..? லேசாக மனதின் ஓரத்தில் சந்தோசமாய் இருந்தது. அவள் என்னை கடந்த போது நான் மட்டும் அவளை பார்க்கவில்லை என்னைப் போலவே இன்னொருவனும் பார்த்துக் கொண்டுதானிருந்தான். நல்ல கரு கருவென கட்டுமஸ்தாய். ஆனால் அவன் முகத்தை பார்க்கையிலேயே அவன் நல்லவனில்லை என்று தோன்றியது. அவன் என்னை பார்த்த பார்வையிலும் அவ்வளவு சிநேகமில்லை.
அவள் போன திசையையே பார்த்து கொண்டிருந்தேன். பின் பக்கத்தில் சூடான மூச்சு காற்று உணர்ந்து திரும்பினேன் மிக அருகில் அந்த கருந்தடியன். நிச்சயம் ஏரியா விட்டு, ஏரியாவந்து சைட் அடிப்பதை பற்றி பேசத்தான் வந்திருப்பான் என்று தெரியும். வீண் வம்பு வேண்டாம் எனறு பின் தங்கினேன். அது அவனுக்கு ஒரு திமிரை கொடுத்திருக்க வேண்டும். மேலும் கிட்டே வந்து லேசாய் கண்களில் சினம் காட்டினான். அவனருகில் நான் மிகவும் சோனியாய் உணர்ந்தேன். இது சண்டையிடும் தருணமல்ல. அதுவும் நிஷா முன்பு ஏதாவது ஆகிவிட்டால் மானம் போய்விடும். பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என்று மெல்ல பின்தங்கி, அவனைவிட்டு விலகி நகர்ந்தேன். பின்னால் அவன் நடுத்தெருவில் நின்று என்னை பார்த்த பார்வை மிக ஏளனமாய் இருந்தது.
அன்று தான் பின்வாங்கினேனே தவிர அடுத்த நாள் அதே தெருவுக்கு கொஞ்சம் முன்னமே சென்றேன். இந்த முனைக்கும், அந்த முனைக்கும் உலாத்தியபடி இருக்கையில் தான் அந்த கோடை வெய்யிலிலும் சில்லென காற்று உணர்ந்து, திரும்பினேன் அவள் தான் என் நிஷாதான். அவள் நடையில் இருக்கும் பெண்மை என்னை ஏதேதோ செய்தது. நேற்று வந்த பெண்ணுடனே இன்றும் வந்திருந்தாள். அவளுடன் நிஷாவும் மெதுவாய் என்னை கடக்க, அவள் பின்னாலேயே நடக்க ஆரம்பித்தேன். ஒரு கட்டத்தில் மிகவும் நெருங்கி நடக்க ஆரம்பித்ததை பின்னால் உணர்ந்தவள், சட்டென திரும்பி பார்த்தாள், ஒரு கணம்.. ஒரே ஒரு கணம் தான் ஆயிரம் அர்த்தங்கள் அவள் பார்வையில். உடலெங்கும் சந்தோஷம் பரவி இன்னும் நெருங்கி அவளை பார்த்து சிரித்தேன். அவள் தன் நடையை மெதுவாக்கி, என்னையே திரும்ப, திரும்ப பார்க்க. எனக்குள் நிச்சயமானது ஆம். நிச்சயம் இது காதல் தான். நிஷா எனக்குத்தான் என்ற நினைப்பே பெரிய பலத்தை கொடுக்க, அவளை இன்னும் நெருங்க முயற்சிக்க, திரும்பி பார்த்த நிஷாவின் கண்களில் இப்போது காதல் இல்லை பயம் இருந்தது.
ஆம் பயம் தான் அவளுக்கு எதிரே அந்த கருந்தடியன் நின்றிருந்தான். நிஷாவுடன் வந்த பெண், சற்று தயங்கி அவளை வேறு பக்கமாய் இழுத்து போக முற்பட, அவளை நகரவிடவண்ணம் க.தடியன் மறித்தான். இப்போது கூட வந்த பெண் அவளை விட்டு விட்டு ஓட, நிஷா ஒன்றும் புரியாமல் திகைத்திருந்த நேரத்தில், நிஷாவின் மேல் கருப்பன் பாய்ந்தான். நிஷாவின் முகத்தில் நகம் பட்டு ரத்தம் வர, அவள் கதறியபடி எனனை நோக்கி வருவது தெரிந்தது. எங்கிருந்துதான் அந்த தைரியம் வந்ததோ.. எனக்கு தெரியாது அது அந்த பைரவருக்கே வெளிச்சம். ஆக்ரோஷமாய் அந்தரத்தில் பறந்து கருந்தடியன் மேல் பாய்ந்து கட்டிப் புரண்டு, புழுதி பரக்க, தெருவில் சண்டையிட்டேன். புரண்ட வேகத்தில் அவன் என் காதை கடித்துவிட்டான். வலி பொறுக்க முடியாமல் பதறி விலக முற்பட, என் காதில் வழியும் ரத்தத்தை பார்த்து பயந்த நிஷா கோபத்துடன் ஏதோ ஒரு குருட்டு தைரியத்தில் கருப்பனை தாக்க முயற்சித்தாள். அதை பார்த்த நான் அவளை தடுக்க ஓடும் பொழுது, குறுக்கே இருந்த பைக் மீது மோதி தரை தேய்த்து விழுந்தேன். மோதிய வேகத்தில் அரைகுறையாய் நின்றிருந்த பைக், கீழே சரிய, பைக்கின் கண்ணாடி தரையில் விழுந்து உடைந்தது, அது வரை தெருவில் நடந்த சண்டையை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த அந்த பைக்காரன், வண்டியை கூட தூக்கி நிறுத்தாமல் கீழேயிருந்த ஒரு பெரிய செங்கல்லை எடுத்து என்னை குறி பார்த்து வீச, குறுக்கே வந்த நிஷாவின் தலையில் பெரும் வேகத்துடன் “சொத்”என்றா சத்தத்துடன் பட, அப்படியே என்னை பார்தபடி எந்த ஒரு சத்தமில்லாமல் அடங்கினாள் என் நிஷா.
என்ன செய்யவது என்று தெரியவில்லை. ஒரு பக்கம் நிஷா, இன்னொரு பக்கம் கல்லெடுத்தடித்தவன், என் கோபத்தையெல்லாம் திரட்டி அவன் மேல பாய முற்படும் போது, பின்னாலேயெ கருந்தடியனும் என்னுடன் சேர்ந்து பாயந்தான். பைக்கை கிளப்பியவனின் முகத்தில் இப்போது பீதியை பார்த்தேன். அப்போது பக்கத்தில் இருந்த அழுக்கு கலர் கார்காரன் காரை கிளம்பினான். நானும், கருந்தடியனும் அந்த பைக்கை துரத்த, எனக்கு பின்னால் வந்த கருந்தடியன் மேல் இடிக்க கார் இடித்தது. தடுமாறி விழுந்தவன் மேல் காரின் முன் சக்கரம் ஏறியது. தீனமான ஒரு அலறலுடன் அவன் அடங்க, என்னால் எதுவும் செய்ய முடியாமல் பதறியடித்து காரின் எதிர்பக்கத்திற்கு ஓடி தப்பினேன். அன்றிலிருந்து காத்திருகிறேன். பழி வாங்குவதற்காக, என் நிஷாவின் சாவிற்கும், என் காதலுக்கு எதரியானாலும் நிஷாவை காதலித்த பாவத்திற்காக உயிரை விட்ட அந்த பெயர் தெரியாத கருப்பனுக்காகவாவது பழி வாங்கியே தீர வேண்டும். அவர்களுக்காகத்தான் காத்திருக்கிறேன் இந்த தெரு முனையில்.
கொஞ்சம் இருங்கள் இதோ வருகிறேன. கார் என் இடத்தை நெருங்க, உற்றுப் பார்த்தேன் சரியாய் கலர் தெரியவில்லை. சனியன் பிடித்த தெருவிளக்கு எப்பவுமே எரியாது. காரினுளிருந்து “திடும்.திடும்” என்று ஒலியெழுப்பி வர, திடு, திடுவென காரின் முன் நாலு கால் பாய்ச்சலில் பாய்ந்தேன். பாய்ததில் சரியான டைமிங் இல்லாததால் மிஸ்ஸாகி பின்னங்கால் காரின் முனையில் இடித்துவிட, வலி தலைகுள் வெடிக்க.. தீனமாய் “அவ்..அவ்..அவ்..அவ்.. “ என்று அலறியபடி, காரின் பின்னால் விந்தியபடி “லொள்.. லொள்” என்று குரைத்தபடி ஓடினேன். இன்றைக்கு மிஸ்ஸாகி விட்டார்கள் . இன்னொரு நாள் வராமலா போகப் போகிறது. காதல், பழி வாங்கும் உணர்ச்சியெல்லாம் உங்களுக்கு மட்டுமா சொந்தம். எங்களுக்கும் தான்.. இருங்க மூச்சிரைக்கிறது.