தாமதமாக... அன்னை மன்னித்து விடக்கூடும். நான் என் தாயிடமும், பிற
தாய்களிடமும் வியந்த குணங்களையும... மேலும் என் அன்னையருடனான சில நினைவுகளை பகிர்ந்து கொள்கிறேன்.
முதலாவதாக, எனக்கு பிடித்த பட்டினத்தார் அவர்களின் ஒரு பாடலுடன், அன்னையரின் பெருமையை துவக்குகிறேன். "மாலைப் பொழுதில் நறுமஞ்சள் அரைத்தே குளித்து வேலை மினுக்கிட்டு விழித்திருந்து சூலாகிப் பெற்றாள் ; வளர்த்தாள; பெயரிட்டாள்; பெற்ற பிள்ளை பித்தனானால் என் செய்வாள் பின்? "
தாயின் வளர்ப்பில் அல்லது கண்காணிப்பில் இருக்கிற வரை, எல்லா குழந்தைகளுமே நல்ல குழந்தைகளாகவே உள்ளன. தாயின் கண்காணிப்பில், குறைந்தது - பனிரெண்டு வயது வரையாவது குழந்தைகள் இருக்க வேண்டும். இப்படி சொல்வதற்கு பல காரணங்கள் உள்ளன. பல உளவியல் விஷயங்களும் உள்ளன.
ஒரு படத்தில் ராஜ்கிரண் இப்படி சொல்வார்."கடவுளால் ஒவ்வொரு மனிதனுக்கும் தனி தனியாக சேவகம் செய்ய முடியாது என்பதற்காகவே
தாயை படைத்ததாக" சொல்வார். தாயை பெருமைப்படுத்த அப்படி சொல்லி
இருந்தாலும், அதில் உண்மை இல்லாமல் இல்லை.
எனக்கு ஒவ்வாமை தொந்தரவு உண்டு. அது என் உடம்பை கடுமையாக பாதிக்கும் பட்சத்தில், நான் பார்க்கவே அருவருப்பு நிறைந்தவனாய் இருப்பேன். உடம்பெங்கும் வீங்கி கொப்பளங் கொப்பளமாய்... ஆஸ்பத்திரிக்கு போனால், பக்கத்தில் அமர நோயாளிகளே கூட, யோசிப்பார்கள். என் மீது அருவருப்பு படாத ஜீவனாய் - என் தாய் மட்டுமே இருந்தாள். இயற்கை, தாய்மைக்கென்று தனியாக, இதயம் கொடுத்துள்ளதோ என்று தோன்றும். நான் என் தாயிட மட்டுமல்ல... ஒவ்வொரு தாயிடமும் இந்த உன்னதத்தை பார்க்கிறேன்.
ஒரு முறை நடிகர் குள்ளமணி சொன்னதை பகிர்ந்து கொள்கிறேன். அவர் குள்ளமாய் இருப்பதனால், அவர் வளர வேண்டி, பிறர் சொன்னதை கேட்டு,
அறுபது கிலோ மீட்டர் தூரம்- குள்ளமணியை தூக்கி கொண்டு, பாத யாத்திரையாய், வருடா வருடம் ஒரு கோவிலுக்கு செல்வாராம் குள்ளமணியின் தாய். அப்போது குள்ளமணிக்கு பனிரெண்டு வயதாம். பன்ரெண்டு வயது குழந்தையை, பலவீனமான தாயால் எப்படி அறுபது கிலோ மீட்டர் தூக்கி கொண்டு நடக்க முடியும். ஆனால் அந்த தாய் தன் பிள்ளை வளர வேண்டும் என்பதற்காக நடந்தாள். "அவர் தேய்ந்தது தான் மிச்சம். கடைசி வரைநான் வளரவே இல்லை" என்று தேம்பி தேம்பி அழுதார்.
என் தாய்க்கு, அந்நாளில் மிகப் பெரிய மனக்குறை ஒன்று உண்டு. நான் ஆறாவது ஹாஸ்டலில் படித்தேன். ஹாஸ்டலில் சேருவதற்கு முன்பு வரை, என் தாயின் மடியில் தலை வைத்து, என் தாயின் மணிக்கட்டில் வளையல்களை தள்ளி தள்ளி விட்டு விளையாடுவேன். ஹாஸ்டலுக்கு போய் வந்த பிறகு, தாய் மடி மறந்தேன். என் அண்ணன் பத்தாவது படிக்கும் வரை, அம்மாவின் மடியில் தலை வைத்து தூங்குவான். "இவன் பெரிய மனுஷன் ஆயிட்டான். அதான் அம்மா மடில படுக்க மாட்டான்" என்று என்னை கேலி செய்வாள்.
இன்று தாய்க்குரிய கடமைகள் முற்றிலும் மாறிவிட்டன. பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் இப்படி சொன்னார். "இனி அம்மாவை சமையலறையில் தேடாதீர்கள்" என்று. உண்மைதான்.
பசிக்கு சோறிட்ட தாய், இன்று குழந்தைகளின் அறிவு பசிக்கு சோறிட தயாராகி
கொண்டிருக்கிறாள். பிள்ளைகளுக்காக, தாய் ஸ்போக்கன் இங்கிலிஷ் கிளாஸ்க்கு போகிறாள். கணினி கற்று கொள்ளுகிறாள்எல்லாவற்றுக்கும் மேலாக, என் மனதை தொட்ட ஒரு விஷயம். அந்த பெண்ணுக்கு, இப்போது முப்பது வயதிருக்கலாம். இந்த தலைமுறை பெண்ணாக இருந்தும், குக் கிராமத்தில் வளர்ந்ததால், எழுதப் படிக்கத் தெரியாது. மணமானதும், கிராமத்தில் இருந்து நகருக்கு வருகிறாள். குழந்தை பிறக்கிறது. எழுதப்படிக்க தெரியாத தன் நிலையை எண்ணி மனம் வெம்புகிறாள். பிற்பாடு தன் குழந்தைகளுக்கு சொல்லித் தர வேண்டி எழுதப் படிக்க கற்று கொண்டாள். இன்று தன் குழந்தைகளுக்கு அழகாக கற்று கொடுக்கிறாள்.

நம்மில் எத்தனையோ அறியப் படாத சாதனையாளர்கள் இருக்கிறார்கள். அதில் முக்கியமானவர்கள் அன்னையர்கள். தமிழில் எத்தனையோ அம்மா செண்டிமெண்ட் படங்கள் வந்துள்ளன. என்னை மிகவும் கவர்ந்த படம்,
வி.சேகர் அவர்கள் இயக்கிய, "நான் பெத்த மகனே" என்ற படம். வாய்ப்பு
கிடைத்தால் பாருங்கள். கேடிவியில் ஒளிபரப்புவார்கள். ஒரு தாய் எப்படி
இருக்க வேண்டும் என்பதற்கு அந்த தாயே உதாரணமாய் இருப்பாள். கடைசியில், ஒரு தாய் எப்படி இருக்கக் கூடாது என்பதற்கும் அவளே உதாரணமாவாள். இரண்டுக்குமே காரணமானது அன்பு தான்.
குடும்பத்தை எத்தனையோ துயரங்கள் அண்டிய போது, "எம்புள்ளைங்க பார்த்துக்குவாங்க" என்று, எங்கள் மீது எங்களுக்கே நம்பிக்கை இல்லாத காலத்தில், எங்கள் மீது நம்பிக்கை வைத்தாள் அம்மா. தாயை பற்றி நிறைய சொல்லி கொண்டே சொல்லலாம்.
அதற்கு முத்தாய்பாக தாயின் மேன்மை சொல்லும், ஒரு பாடலுடன் இந்த பதிவை முடிக்கிறேன். அதிகம் அறியப்படாத பாடல். S.P.B பாடிய "மதன மாளிகை" என்ற படத்தில் இடம் பெற்ற "ஒரு சின்ன பறவை அன்னையை தேடி வானில் பறக்கிறது" அவரவர்கள், தத்தம் தாயின் நினைவுகளுடன், இந்த பாடலையும் கேட்டு மகிழுங்கள்.