ஒரு சுபயோக சுபதினத்தில் எங்கள் காதல் அவளின் அண்ணனுக்கு தெரியவர, எல்லா அண்ணன்களை போல அவனும் என் பேக்ரவுண்ட் எலலாவற்றையும் விசாரித்து, என்னை போன்ற பக்கி பயலை தன் தங்கை காதலிப்பதை விரும்பாமல் என்னை ஒரு நாள் தனியாய் அழைத்துப் பேசினான். கிட்டத்தட்ட ஒரு அமெரிக்கன் தமிழ் பேசியதை போல பேசினான். என்னை கொசு போல பார்த்தான். முதல் பார்வையிலேயே அவனுக்கு என்னை பிடிக்கவில்லை என்று புரிந்தது. எந்த அண்ணனுக்கு தான் தன் தங்கையின் காதலனை பிடிக்கும்?.
அடுத்த ரெண்டு நாள் ஷ்ரத்தா எனக்கு போன் செய்யவுமில்ல, ஆபீஸுக்கு வரவுமில்லை. போன் செய்தாலும் கட் செய்தாள். மீராவை பார்த்து கேட்டபோது வீட்டில் அவன் அண்ணன் ஒரே பிரச்சனை பண்ணுவதாகவும் உன்னை இன்னைக்கு ராத்திரி கால் செய்வதாக சொன்னாள் என்றாள். ராத்திரிக்கு நிறைய நேரம் இருந்தது. உடனடியாய் அவளூடய ப்ளாட்டுக்கு போய் பார்க்கலாமா என்று பரபரத்தேன். வேண்டாம் நாம் போய் ஏதாவது பிரச்சனை ஆகிவிடப் போகிறது என்று என்னையே தடுத்துக் கொண்டேன். ராத்திரி பத்து மணியிருக்கும் ஷ்ரத்தா போன் செய்தாள். மிக ரகசியமாய் பேசினாள்.
“ஷங்கர்.. என்ன சொல்வதென்றே தெரியவில்லை.. நிலைமை ரொம்பவும் மோசமாக இருக்கிறது. என் அண்ணனுக்கு உன்னை பிடிக்கவில்லை. எவ்வளவோ சொல்லிவிட்டேன். அடிக்கிறான். இதுவரை நான் யாரிடமும் அடிவாங்கியதே இல்லை தெரியுமா..? ”
“என்ன அடிக்கிறானா..? ஷ்ரத்தா நீ ஒன்றும் சின்ன குழந்தையில்லை.. ‘ம்’னு ஒரு வார்த்தை சொல்லு நான் உன்னை கூட்டிட்டு போய் கல்யாணம் செஞ்சிக்கிறேன். உங்க அண்ணன் மாதிரி ஆயிரம் பேர நான் பார்பேன். நீ தைரியமா இரு.. “ என்றேன். உள்ளுக்குள் பதட்டமாய் இருந்தது. வெளியில் தான் பேசினேனே தவிர என் வீட்டில் சொல்ல்வில்லை, அது ஒரு பெரிய விஷயம். என்னதான் என் விருப்பத்திற்கு மறுப்பேதும் சொல்ல மாட்டார்கள் என்றாலும் அவர்களை கேட்காமல் செய்வது அவ்வளவு நல்லதாக படவில்லை. இருந்தாலும் வேறு வழியில்லை ஷ்ரத்தா எனக்கு வேண்டும். அவ்வளவுதான்.
“ஆனால் ஒரு விஷயம் ஷங்கர். அவன் எனக்கு எதிராய் எதிர்க்க, எதிர்க்க, உன்னை அடைய வேண்டும் என்று மனதினுள் வேகம் அதிகமாகிறது தெரியுமா..? நான் என் அப்பாவுடன் பேசப் போகிறேன். நிச்சயம் அவர் என்னை புரிந்து கொள்வார் என்ற நம்பிகை இருக்கிறது. இன்னும் ரெண்டு நாளில் முடித்துவிடுவேன். அதற்கப்புறம் எல்லாமே சுபம். சரியா போயிரும்.. நீ கவலைப்படாதே.. ஓகே.. நான் நாளை பேசுகிறேன். “ என்று சொல்லி விட்டு போனை வைத்தாள்.
இவ்வளவு இக்கட்டிலிலும் அவள் தைரியமாய் பேசியது நம்பிக்கையாகவும் இருந்தது, இன்னொரு பக்கம் பயமாகவும் இருந்தது. வழக்கமாய் நாம் பேச வேண்டிய விஷயங்களை இவள் பேசியதை கேட்டு, எப்படி இவளை வைத்து சமாளிக்கப் போகிறேன் என்று.
அடுத்த ரெண்டு நாள் எனக்கு மெசெஞ்சர் மீராதான். ஒவ்வொரு மணி நேரத்திற்கும் எனக்கு அப்டேட் செய்து கொண்டேயிருந்தாள். சாயங்காலம் நேராக அவளை நேரே பார்க்க போய்விட்டேன். “உன்னை பார்த்தா எனக்கு பாவமா இருக்கு” என்றாள். நான் ஒரு மாதிரி டென்ஷனாய் சிரித்தேன்.
எனக்கு இந்த அவஸ்தை புதியதாய் இருந்தது. என் நண்பர்கள் இம்மாதிரி சொல்லும் போது எவ்வளவோ தடவை கிண்டல் செய்திருக்கிறேன். விட்டுட்டு வேற ஒருத்திய பாப்பியான்னு. ஆனால் என்னால் இப்போது உணர முடிந்தது.
ஒரு நாள் ராத்திரி மெல்ல என் அம்மாவிடம் என் விஷயத்தை ஆரம்பித்தேன். மெதுவாக ஏதும் பேசாமல் கேட்டுக் கொண்டிருந்தவள், எல்லாவற்றையும் முடித்தவுடன், “உனக்கு அந்த பொண்ணை வச்சி காப்பாத்த முடியும்னா. .. எங்களுக்கு ஏதும் பிரச்சனையில்லை. நான் அப்பாகிட்ட பேசறேன். ஆனா ஒரு விஷயம் நல்லா யோசிச்சிக்க.. நீ சினிமாவுக்கு போவணும்.. அது இதுன்னு பேசிட்டிருக்கே.. நாளைக்கே அந்த பொண்ணு உன்னை நம்பி வந்திருச்சின்னா அதெல்லாம் மூட்டை கட்டி வச்சிட்டு ஒரு பொழைப்ப பார்க்க வேண்டியிருக்கும். அதுக்கும் ரெடியாயிரு..” என்றாள்.
அவள் சொன்னது என்னவோ சரி தான் என்று தோன்றியது. காதல் திருமணத்தை எதிர்க்கும் அளவுக்கு கட்டுபெட்டியான குடும்பம் என்னுடய்து அல்ல. என் கனவை, எதிர்காலத்தை என்னுடனேயே உலாவி கனவு காண்பவர்கள். அதனால் என்னுடய விரியம் அவர்களுக்கு தெரியும்.
இரண்டாவது நாள் நடு ராத்திரியில் என் போன் அலறியது. அடித்து பிடித்து எழுந்து எடுத்தேன் ஷ்ரத்தா..” உய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்” என்று அலறினாள். எனக்கு தூக்கி வாறி போட்டது.. பிறகு அவள் குரலில் இருந்த உற்சாகத்தை பர்த்த போது, பதட்டம் அடங்கி, அவள் நார்மலான மனநிலை வரும் வரை காத்திருந்தேன்.
“ஷங்கர்.. ஷங்கர்.. நான் சொன்னேனல்லவா..? என் அப்பா எனக்கு எதிராய் ஏதும் செய்ய மாட்டார் என்று.. சரி என்று சொல்லிவிட்டார். எனக்கு இப்போது உன்னை பார்க்க வேண்டும் போலருகிறது.. வருகிறாயா..? இருக்க அணைச்சு ஒரு உம்மா தந்தால் தான் என் சந்தோஷத்தை அடக்க முடியும் என்று தோன்றுகிறது. வருகிறாயா..? என் வீட்டின் கீழே வந்து ஹாரன் அடி.. கீழே வருகிறேன். என்ன வருகிறாயா.? நீ வராமல் எங்கே போகப் போகிறாய்.. வருவாய் உனக்காக காத்திருப்பேன்..” என்று பதிலை எதிர்பார்க்காமல் போனை கட் செய்தாள்.
மணி மூணு ஆகியிருந்தது. மணி என்ன ஆகிறது? இந்த அதிகாலையில் என்ன நிலமையில் இருப்போம்.? வரமுடியுமா? முடியாதா? என்று என் நிலையில் யோசிக்காமல் உடனே வா என்று சொல்லும் போது கொஞ்சம் எரிச்சலாக இருந்தாலும், உடனே அவளை பார்க்க வேண்டும் போல இருநதது என்பதை ஒத்துக் கொள்ளாமல் இருக்க முடியவில்லை.
வீட்டில் ஏதும் சொல்லாமல் மெதுவாக கதவை திறந்து என் சாவியை எடுத்து பூட்டிக் கொண்டு நேரே அண்ணாநகர் கிளம்பினேன். அந்த அதிகாலை பனியும்,ஊதக்காற்றும் முகதில் அடிக்க, சந்தோசமாயிருந்தது. நான் ஓட்டிய வேகத்திற்கு முகத்தில் அடித்த காற்று. ஷ்ரத்தாவும் அழுத்தமான முத்தம் போல மூச்சு முட்டியது.
அண்ணாநகரை அடைந்து அவளின் ப்ளாட்டின் வாசலில் வண்டியை நிறுத்தி ஹாரன் அடித்தவுடன், சட்டென அவளின் ப்ளாட் வெளி லைட் எறிந்து,பால்கனியில் எட்டிப்பார்த்து உற்சாகமாய் கையசைத்து, தடதடவென ஓடி வந்தாள். ஓட்டத்தில் அவளின் சந்தோஷம் தெரிந்தது. தடுக்க ஏதுமில்லா காட்டாறு போல கதவை பரபரப்பாக திறந்து ஓடி வந்து என் கழுத்தில் மாலையாய் கையை கோர்த்து, இடுப்பில் அவளது கால்களால் என்னை பிணைத்து, இறுக அணைத்தபடி, என் முகத்தில் வெறியில் முத்தமிட்டாள்.
“நான் சொன்னேனல்லவா.. அப்பா ஒத்துக் கொண்டுவிடுவார் என்று. என் செல்ல அப்பா.. ஸோ.. க்யூட்.. என்னிடம் கேட்ட ஒரே கேள்வி.. டூட்டூ.. அவர் என்னை அப்படித்தான் கூப்பிடுவார்.. நிஜமாவே உனக்கு அவன் தான் வேணுமா? என்ற்துதான். நான் ஒரே பதிலாய் அழுத்தம் திருத்தமாய் ஆமாம் என்றேன். தட்ஸ் இட்.. எல்லாம் முடிந்துவிட்டது. என் அண்ணன் முகத்தில் ஈயாடவில்லை.”
இவ்வளவு சீக்கிரமாய் ஒரு காதல் கதை சுபமாய் முடியுமா? என்று என்னால் நம்ப முடியுமா? என்றெல்லாம் யோசனை ஓடியது. இது நிஜம் தான். ஷ்ரத்தாவின் சந்தோஷம், அவளின் இறுக்கமான மூச்சு முட்டும் அணைப்பு, அவளின் கதகதப்பு எலலாமே நிஜம் தான்.
”உன் அப்பாகிட்ட என்னை பத்தி எல்லாத்தையும் சொல்லிட்டியா..?”
“எல்லாவற்றையும்.. உன் குடும்பத்தை ப்ற்றி கூட என் அப்பாவுக்கு தெரியும்”
“தென்.. அடுத்தது என்ன ஷ்ரத்தா..? என் வீட்டில் வ்ந்து உங்க வீட்டில் எப்போது பேச் சொல்லட்டும்?”
“அதற்கு முன்னால் ஒரு முக்கியமான விஷயம்.. உன்னிடம் பாஸ்போர்ட் இருக்கிறதா..?”
” பாஸ்போர்ட்டா? இனிமேல் தான் எடுக்க வேண்டும். ஏன்.. என்ன விஷயம்?”
“என்ன இப்படி கேட்டுவிட்டாய்.. நீ அமெரிக்கா வரப்போகிறாய் இல்லையா..? அதனால்தான்..” என்றவளை ஆச்சர்யமாக பார்த்தபடி..
”என்ன சொல்றே நீ.. நான் அமெரிக்காவுக்கு வருவதா.?”
”ஆமா.. கல்யாணம் பண்ணிட்டு நேரே அமெரிககா போய் செட்டிலாகப் போகிறோம்” என்றவுடன் அவளுக்கு என்ன பதில் சொல்வது என்று அறியாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். இம்முறையும் அவள்
என்னுடய முடிவை எடுப்பதை தடுக்க முடியாமல்.
தொடரும்......