இரண்டுமாம் ஒன்றுமாம் யாவுமாம்...!
இரண்டடுக்கு கோப்பையாய்
கண்கள் பொங்கி வழிய
கனா காணும் இரவுகளில்.
மிதக்கும் பாய்மரக்கப்பலில்
துடிக்கும் மீனாய்
எண்ணங்கள் ஊசலாட
தொட்டுச்செல்லும் காற்றில்
மலரின் தேனுண்ட மயக்கத்தின்
வண்டாய் மனமது செல்ல...
வாசல் அற்ற வீட்டின்
கதவாய் நானும்
கூரையில்லா வீட்டின்
தரையாய் அவளும்
உருண்டோடும் பூமிப்பந்தில்
ஆளுக்கொரு திசையில்
சிதறி சிக்குண்டு அல்லல்பட்டு
ஆவியும் ஆசையுமற்ற
ஆடாமல் ஆடும் அலையாய்
ஆகிப்போனோம்...
கரை தொடாமல் பின்வாங்கி
பின் தொடராத பகலின் நிழலாய்
நிதர்சனம் பேசிய இரவுகள்
இறக்கையொடிந்த கிளியாய்
கூவிக்கொண்டிருக்கின்றன...
என்றும் எல்லையற்று
தாவல் கொண்ட மனம்
அன்றோ கூனிக்குறுகி
சுருங்கிப்போகிறது விரியத்
தெரிந்தும் விரியாமல்
வீசத்தெரிந்தும் வீசிச்செல்லாத
காற்றின் பிம்பமாய்...
கண்ணுக்கு புலப்படாத
அக்னியின் குளுமையின் பயனாய்
கானல் கொண்ட தரையின்
வெம்மை சுட்டுத்தெறிக்க
அச்சமில்லாமல் ஆசைதீர்த்து
அடங்கிப்போனது அடங்காத
மனப்பறவையின் காலடியில்
காதல் இரண்டுமாம்
ஒன்றுமாம் யாவுமாகி ...