திறந்த இதயத்தில் உந்தன் அனுமதி இன்றி
என் காதலை பூட்டியவள் நான்தான் .
உன் நினைவுகளின் வெப்பத்தில்
குளிர் காய்கிறேன் என்று
நடுக்கத்துடன் சொன்னவளும் நான்தான் .
நீ
பார்க்கும்போது உன் விழிகளுக்கு காட்சிகளாய்
நான் இருப்பேன் என்றேன் .
நீ பேசும்பொழுது உனது வாக்கியத்திற்கு வார்த்தைகள்
நான் தொடுப்பேன் என்றேன் .
உன் நிஜவிரல் பிடிக்கும் வரை
தினம் உன் நினைவுகளின் விரல் பிடித்து
நடப்பேன் என்றேன்.
இரவினில் உன் இமைகள் மூட மறுக்கும்
நேரத்தில் எல்லாம் என் நினைவுகள்
உன்னை தாலாட்டும் என்றேன் .
நமது திருமணத்தில் வானம் இசை அமைக்க
இடிகள் இசைக்கருவிகளாகும் என்று
சொன்னவளும் நான்தான்,
மேகங்கள் அட்சதை தூவ
நட்சத்திரங்கள் மலர்களாகும் என்று
சொன்னவளும் நான்தான் ,
நம் காதல் பொய்த்தால் கடல் நீர் வற்றிப்போகும் ,
மழைத்துளி அமிலமாகும் ,
ஒற்றைத் தீக்குச்சியில்
இந்த உடல் உனக்குமுன்
உடன் கட்டை ஏறும் என்று
சொன்னவளும் நான்தான் .
நம்மை பிரிக்க நேர்ந்தால் இருவரையும் ஒன்றாய்
சிக்கன சிலுவையில்
அறைந்துக் கொல்லட்டும் என்றேன் .
உன்னை பிரிந்து சுவாசிக்க மாட்டேன்.
ஒருவேளை பிரிய நேர்ந்தால்
இந்த சுவாசமே வேண்டாம் என்றேன்
இவை அனைத்தையும் உச்சரித்த
இதே உதடுகளால்தான்
இன்று உன் இதயத்தை தொலைக்கப் போகும்
இந்த வார்த்தை ஈட்டிகளையும் வீசுகிறது .
என் வீட்டில் அடுப்பெரிக்க
இன்று நாம் காதல் விறகாகிப்போனது .
என்னை மன்னிக்கவேண்டாம்
என்னை மறந்து விடுங்கள் !
உன்னை நேசித்தது நிஜம் !
தினம் உன் நினைவுகளிலே
சுவாசித்தது நிஜம் !
காதலில் இணைவது போன்ற
கதைகள் கேட்ட நான்
ஏனோ பிரிவது போன்ற கதைகள்
கேட்க மறந்துவிட்டேன்
காதல் செய்வதற்க்கு நாம் இருவர் போதும் என்றேன்
இன்றுதான் அது இந்தியக் காதலில்
கண் மூடி சொல்லும் பொய் என்று உணர்ந்தேன் .
காதலுக்கு கட்டுத்தரிக்கூட கிடையாது
ஆனால்
கல்யாணத்திற்கு கட்டுத்தரி மட்டும் அல்ல
கடிவாளமும் சேர்ந்து வந்துவிடுகிறது .
பறப்பதற்கு கற்றுத் தந்தாய் என் காதலா .
என் சிறகுகளில் கடிவாளம்
இறுக்கப்பட்டு இருப்பதை யார் அறிவாரோ !
குழந்தைகளின் பசியைவிட
சாராயதின் ருசியை அதிகம் அறிந்த
என் தந்தை !
ரேசன் கடையில் தந்த சேலையின்
இளமை தொலைந்தும் இன்னும்
கிழிந்த போத்தலை தைத்து
மானம் காக்க போராடும் என் தாய் !
தான் பூப்பெய்த செய்திகூட தெரியாது
ஆவேசமாய் அடுப்பூதும் என் தங்கை!
ஓசியில் பக்கத்து வீட்டில் கருப்பு வெள்ளைப்படம்
பார்த்த கனவுகளை என் வீட்டிலும்
நிஜமாக்கத் துடிக்கும் என் தம்பி !
இத்தனை பேருக்கும் மொத்தமாய் மாதம்,
மாதம் செயற்கை சுவாசம் கொடுக்கும்
ஆக்சிஜன் குடுவையாய் நான் மட்டும்.
இத்தனை கடிவாளங்களின் ஒரு முனை என் கழுத்திலும்
மறுமுனை அவர்களின் கழுத்திலும்
சுருக்குக் கயிராய் பிணைக்கப்பட்டுள்ளது .
எப்படி ஓடிவருவேன் காதலா ?
இத்தனை உயிர்களை கொன்ற
கொலைகாரி என்றப் பட்டத்துடன்
உன் மனைவியாக !
உன்னை காதலித்து ஏமாற்றியவளாக
இருந்துவிட்டுப் போகிறேன் இந்த
ஜென்மத்தில் மட்டும் மன்னித்துவிடுங்கள்,
உங்கள் நினைவுகளை
மறக்க முடியாத இவளை மறந்துவிடுங்கள்........