அப்பறம் மத்ததெல்லாம் வேண்டாம் பாக்கியராஜ் மேட்டர் !!! வேண்டாம் ... எழுத வேண்டாம். திருமணத்திற்கு முன்பு எதிர்பாலினரோடு எந்த வயதிலாவது காதல் இருந்ததா இல்லையா ? கண்டிப்பாக இருக்கும். யாரும் சின்ன வயசிலேயே குட்டிச் சாமியார் ஆகிவிடுவதில்லை. அது இன்பாக்ஸுவேசனா ? வேற எதாவதா ? எப்படி எதோ ஒண்ணு கண்டிப்பாக இருந்திருக்கும். ஐந்து வயதாக இருக்கும் போது தெருவில் இருக்கும் அதே வயது பையன் என்னிடம் சொன்னேன். 'அந்த அக்காவை நான் லவ் பண்ணுகிறேன்'. அந்த அக்காவுக்கு அப்ப 15 வயசாவது இருக்கும். சும்மா இருக்க முடியாமல் அதைப் போய் வெளம்பரப்படுத்த அந்த பையனுக்கு முதுகு வீங்கியது மிச்சம். இப்படி பலப் பலக் காதல் கதைகளை எல்லோரும் கடந்தே வந்திருப்போம். எனக்கும் ஐந்து வயதிருக்கும் அப்போதெல்லாம் பாட்டி வீட்டுக்குத்தான் விடுமுறைக்கு மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் செல்வேன். அங்கேயே அப்பாவின்
பெரியம்மா மகள் வீடும் இருந்தது, எனக்கு அத்தை முறை. பார்வதி அத்தை என்று தான் கூப்பிடுவோம்.
அத்தைக்கு ரோசாப்பு நிறத்துல அழகான குழந்தை மூன்று வயசுதான் இருக்கும், படிப்பறிவு இல்லாத பாட்டியும் அத்தையும்...'டேய் உன் பொண்டாட்டிக் கூட போய் விளையாடுடா என்பார்கள்' குழந்தை கொழுகொழு என இருப்பதால் ஆசை ஆசையாக நானும் அந்த குழந்தையும் விளையாடுவோம், அதுக்குச் சரியாகக் கூட பேச வராது. எப்போதும் சிரித்துக் கொண்டே இருக்கும். பெயர் திலகா. எப்போது பாட்டி வீட்டுக்குச் சென்றாலும் திலகா எனக்குத்தான் என்பார்கள். அவர்கள் சொல்லும் போது கூச்சமாகக் கூட இருக்காது. அறியாத வயசு இல்லையா ? பெரியவங்களானதும் கல்யாணம் தானே பண்ணிக்கிறாங்க, அது போல் பெரியவனானதும் திலகாவை நான் கட்டிக்கனும் போல.....' திலகாவிடம் அப்படித்தான் நானும் சொல்வேன். 'உன்னைய பெரியவனானதும் கட்டிக்கிறேன்...' பதிலுக்கு சிரிக்கும். இப்படி ஒரு ஆண்டு வரையில் அன்பாக திலகாவிடம் விளையாடியது விதிக்குப் பிடிக்கவில்லை போலும். திலகாவிற்கு பெரியம்மை போட்டு ... மூன்று நாளில் இறந்ததுவிட்டது. தொட்டியில் போட்டு சுடுகாட்டிற்கு தூக்கிச் சென்றார்கள். அந்த வயதில் எல்லாவற்றையும் பறிகொடுத்தது போன்ற சொல்லமுடியாத சோகம். பார்வதி அத்தை தஞ்சாவுருக்கு குடும்பத்தோடு பெயர்ந்த பிறகுதான் அவையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்தது. இது காதலா ? இல்லையா ? எனக்குச் சொல்லத் தெரியவில்லை. அந்த இழப்பின் சோகம் பல ஆண்டுகள் நீடித்தது. மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும் எந்த நிகழ்வும் மறக்கவே முடியாத நினைவுகளாகவே இருக்கும். அந்த வகையில் என்னுடைய ஐந்துவயதில் மூன்று வயது அத்தை மகள் திலகா மறைந்தது இன்றும் கூட நினைவில் இருக்கிறது. எங்கள் வீட்டில் 10 ஆண்டுவரை கருப்பு வெள்ளை புகைப் படமாக இருந்த திலாவின் நிழல்படம் அதன் பிறகு கரையானுக்கு உணவாகி மறைந்தது. அந்த குழந்தை உயிரோடு இருந்து, நானும் பெரியவனாக இருந்தால் நான் அவளைத்தான் மணந்து கொண்டிருப்பேன் என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. அப்படி ஒன்று நடக்கவே இல்லை என்பதால் அதுபற்றி கற்பனை கூட வீண் தான். கால ஓட்டத்தில் எது எப்படி நடக்கும் என்பதை யார் அறிவார். என்னுடைய முதல் காதல் 5 வயதில் ஆரம்பித்து 6 வயதில் முடிந்தது. அதன் பிறகு காதலெல்லாம் வரவில்லை. எனக்கும் காதல் திருமணம் செய்து கொள்ளவே ஆசை. எனக்கு அப்படி ஒரு வாய்ப்புக் கிடைக்கவில்லை. நிச்சயக்கிப்பட்ட திருமணம் தான் எனது திருமணம்.
பெரியவர்களே...தாய்மார்களே...குழந்தைகளின் சின்ன வயசிலேயே இன்னாருக்கு இன்னார் என்று முடிச்செல்லாம் போட்டு வைத்துடாதிங்க. அது பெரிய தப்பு !