வலிகளை தாங்கிடும் இதயங்கள் எல்லாம்
விழிகளை மூடிஅழுதிடும் அன்பே...
வலிகள் நிறைந்த என் இதயம்
விழிகள் மூடி அழவும் வசதியில்லை....
நீ இருக்கும் விழிகளுக்கு
நீர் இறைக்க தெரியாது....
உனை சுமக்கும் நினைவுகளை
அழித்துவிட முடியாது....
ஏன் இந்த மனதுக்கு
காயங்கள் தந்தாய்...
காயமும் உன் காதலென்று
தெரியாமல் சுமக்குதடி....
நீ தொட்ட தேகமெல்லாம்
பட்டாக எரியுதடி....
மலராமல் என் காதல்
மொட்டோடு கருகுதடி....
சிட்டாக பறந்து விட்டாய்
சில வேடந்தாங்கலைப் போல்...
முட்டாள்கள் யாருமில்லை
என் போன்ற ஆண்களைப்போல்...
என் நிழல் என தொடர்வாய் என நினைத்தேன்
என் பகையென மாறினாய்....!
பாசமாய் இருப்பாய் என நினைத்தேன்
அது வேசம் என சொல்லாமல்
சொல்லிவிட்டு போனாய் ....!
நான் நீயாகவும் நீ நானாகவும்
இருப்பாய் என நினைத்தேன்...
ஆனால் என் உயிர் வாங்கி போக வந்தவள்
நீ என்று அப்போ நினைக்கவில்லையே ....!
பேசத் தெரிந்தும் ஊமையாய் மனதுக்குள்
குமுறி குமுறி கதறுகிறேன்...
பேதை இவன் தவியாய் தவிக்கிறான் ...!
வரும் கால வாழ்வை எண்ணி துடியாய் துடிக்கிறான்..!
உன் கயல்விழியின் பார்வையாலே
எம்மை நீ கவர்ந்தாயே..
உன் கருங்கூந்தல் அசைவினிலே
எம்மை நீ ஈர்த்தாயே..
பசியாலே பறந்துவரும்
ரீங்காரவண்டினங்கள் -உன்
குரலோசை இனிமைகண்டு
மயங்கியங்கு நின்றதடி
எள்லோரின் இன்பத்தை
மறுகணமே துன்பமாக்கி
எங்கே நீ சென்றாயோ..?
உன் முகத்தின் பேரழகு
அனைவரையும் சாய்த்ததடி
உன் மென்னடையழகால்
ரீங்கார வண்டினங்கள்
உனை உரசிசென்றதடி ..
உன் வரவு இல்லாமல்
இளமனசு வாடுதடி
வண்டினங்கள் சாகுதடி
நீ சென்ற இடம் தெரிந்தால்
நாமெல்லாம் வந்திருப்போம்
நீயில்லா இவ்வுலகினிலே
வாழவே எமக்கு நாதியில்லை
நீ எங்கு சென்றாயோ ?
தத்தளிக்கும் ரிங்கர வண்டினங்கள்..!!!
காதலுக்கும் வயதுக்கும் எதாவது தொடர்ப்பு இருக்கிறதா ? முதன் முதலில் அம்மா அப்பா விளையாட்டு யாரோடு விளையாண்டோம் என்று இன்றும் நினைத்திருந்தால் அதெல்லாம் காதல் என்ற இலக்கணத்துக்குள் வராதா ? இன்பேக்ஸ்வேசன் என்று சொல்லுவாங்களே, எதோ ஒரு ஈர்ப்பு அது பேரு காதல் இல்லை என்றெல்லாம் சொல்லுவார்கள், காதல் எந்த வயதில் வரவேண்டும் என்று எதாவது வரையறை இருக்கிறதா ? ஆணோ பெண்ணோ பருவமடைந்ததும் இயல்பாகவே எதிர்பாலினரின் மீது ஈர்ப்பு வரும் பருவம் காதல் பருவமா ? எல்லோருக்கும் அது போல் ஈர்ப்பெல்லாம் நிகழ்ந்து விடுவதில்லை. மீசை அரும்பும் பருவத்தில் காதலா ? செருப்பால் அடி :) அப்போ அந்த வயதில் அது தப்பா ? சென்ற நூற்றாண்டு வரை நமது மரபணுக்களில் சிறுவயது திருமணம் கலந்து இருக்கிறது. தற்பொழுது சமூக அமைப்பால் ஒருவன் சொந்தக் காலில் நிற்கும் தகுதியைப் பெரும் போதுதான் அவனுக்கு திருமணமே. அப்போ காதல் ? முதலில் வேலை அப்பறம் தான் காதல் கத்திரிக்காயெல்லாம். வயதுக்கும் காதலுக்கும் உள்ள இடைவெளி அதிகரித்துக் கொண்டே செல்கிறதல்லவா ? 'ஹிஹி... நான் என் மனைவியைக் காதலிக்கிறேன்....' அச்சோ அச்சோ ... திருமணத்திற்கு முன்பு வரும் ஈர்ப்பைப் பற்றிப் பேசுகிறோம். பெண்டாட்டி தாசர்கள் ஒதுங்கிக் கொள்ளுங்கள். :) திருமணத்திற்குப் பிறகு மனைவியைக் காதலிக்காவிட்டால் முதலில் சோறு கிடைக்காது, அப்பறம் மத்ததெல்லாம் வேண்டாம் பாக்கியராஜ் மேட்டர் !!! வேண்டாம் ... எழுத வேண்டாம். திருமணத்திற்கு முன்பு எதிர்பாலினரோடு எந்த வயதிலாவது காதல் இருந்ததா இல்லையா ? கண்டிப்பாக இருக்கும். யாரும் சின்ன வயசிலேயே குட்டிச் சாமியார் ஆகிவிடுவதில்லை. அது இன்பாக்ஸுவேசனா ? வேற எதாவதா ? எப்படி எதோ ஒண்ணு கண்டிப்பாக இருந்திருக்கும். ஐந்து வயதாக இருக்கும் போது தெருவில் இருக்கும் அதே வயது பையன் என்னிடம் சொன்னேன். 'அந்த அக்காவை நான் லவ் பண்ணுகிறேன்'. அந்த அக்காவுக்கு அப்ப 15 வயசாவது இருக்கும். சும்மா இருக்க முடியாமல் அதைப் போய் வெளம்பரப்படுத்த அந்த பையனுக்கு முதுகு வீங்கியது மிச்சம். இப்படி பலப் பலக் காதல் கதைகளை எல்லோரும் கடந்தே வந்திருப்போம். எனக்கும் ஐந்து வயதிருக்கும் அப்போதெல்லாம் பாட்டி வீட்டுக்குத்தான் விடுமுறைக்கு மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் செல்வேன். அங்கேயே அப்பாவின்
பெரியம்மா மகள் வீடும் இருந்தது, எனக்கு அத்தை முறை. பார்வதி அத்தை என்று தான் கூப்பிடுவோம்.
அத்தைக்கு ரோசாப்பு நிறத்துல அழகான குழந்தை மூன்று வயசுதான் இருக்கும், படிப்பறிவு இல்லாத பாட்டியும் அத்தையும்...'டேய் உன் பொண்டாட்டிக் கூட போய் விளையாடுடா என்பார்கள்' குழந்தை கொழுகொழு என இருப்பதால் ஆசை ஆசையாக நானும் அந்த குழந்தையும் விளையாடுவோம், அதுக்குச் சரியாகக் கூட பேச வராது. எப்போதும் சிரித்துக் கொண்டே இருக்கும். பெயர் திலகா. எப்போது பாட்டி வீட்டுக்குச் சென்றாலும் திலகா எனக்குத்தான் என்பார்கள். அவர்கள் சொல்லும் போது கூச்சமாகக் கூட இருக்காது. அறியாத வயசு இல்லையா ? பெரியவங்களானதும் கல்யாணம் தானே பண்ணிக்கிறாங்க, அது போல் பெரியவனானதும் திலகாவை நான் கட்டிக்கனும் போல.....' திலகாவிடம் அப்படித்தான் நானும் சொல்வேன். 'உன்னைய பெரியவனானதும் கட்டிக்கிறேன்...' பதிலுக்கு சிரிக்கும். இப்படி ஒரு ஆண்டு வரையில் அன்பாக திலகாவிடம் விளையாடியது விதிக்குப் பிடிக்கவில்லை போலும். திலகாவிற்கு பெரியம்மை போட்டு ... மூன்று நாளில் இறந்ததுவிட்டது. தொட்டியில் போட்டு சுடுகாட்டிற்கு தூக்கிச் சென்றார்கள். அந்த வயதில் எல்லாவற்றையும் பறிகொடுத்தது போன்ற சொல்லமுடியாத சோகம். பார்வதி அத்தை தஞ்சாவுருக்கு குடும்பத்தோடு பெயர்ந்த பிறகுதான் அவையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்தது. இது காதலா ? இல்லையா ? எனக்குச் சொல்லத் தெரியவில்லை. அந்த இழப்பின் சோகம் பல ஆண்டுகள் நீடித்தது. மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும் எந்த நிகழ்வும் மறக்கவே முடியாத நினைவுகளாகவே இருக்கும். அந்த வகையில் என்னுடைய ஐந்துவயதில் மூன்று வயது அத்தை மகள் திலகா மறைந்தது இன்றும் கூட நினைவில் இருக்கிறது. எங்கள் வீட்டில் 10 ஆண்டுவரை கருப்பு வெள்ளை புகைப் படமாக இருந்த திலாவின் நிழல்படம் அதன் பிறகு கரையானுக்கு உணவாகி மறைந்தது. அந்த குழந்தை உயிரோடு இருந்து, நானும் பெரியவனாக இருந்தால் நான் அவளைத்தான் மணந்து கொண்டிருப்பேன் என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. அப்படி ஒன்று நடக்கவே இல்லை என்பதால் அதுபற்றி கற்பனை கூட வீண் தான். கால ஓட்டத்தில் எது எப்படி நடக்கும் என்பதை யார் அறிவார். என்னுடைய முதல் காதல் 5 வயதில் ஆரம்பித்து 6 வயதில் முடிந்தது. அதன் பிறகு காதலெல்லாம் வரவில்லை. எனக்கும் காதல் திருமணம் செய்து கொள்ளவே ஆசை. எனக்கு அப்படி ஒரு வாய்ப்புக் கிடைக்கவில்லை. நிச்சயக்கிப்பட்ட திருமணம் தான் எனது திருமணம்.
பெரியவர்களே...தாய்மார்களே...குழந்தைகளின் சின்ன வயசிலேயே இன்னாருக்கு இன்னார் என்று முடிச்செல்லாம் போட்டு வைத்துடாதிங்க. அது பெரிய தப்பு !